தமிழக சட்டமன்றத்தில் நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிமுக கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ளது. இச்சூழலில், சம்பந்தப்பட்ட நான்கு எம்.எல்.ஏ.க்களும் கட்சியில் இருந்து விலகாமல் பதவியை மட்டும் ராஜினாமா செய்துவிட்டு, உடனே தவெகவில் இணைந்துள்ளனர். குதிரை பேரம் நடந்திருக்க வாய்ப்புள்ள நிலையில், ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் உரிய விசாரணை நடத்தவில்லை,” என்று வாதிட்டனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “ராஜினாமா கடிதங்கள் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் பெறப்பட்டுள்ளன. அவர்கள் தாமாக முன்வந்துதான் ராஜினாமா செய்கிறார்களா என்பதைச் சரிபார்த்த பிறகே, சபாநாயகர் அதனை ஏற்றுக்கொண்டார்,” என விளக்கமளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இப்போதைக்கு எந்த இடைக்காலத் தடையையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தனர். மேலும், இந்த மனு தொடர்பாக சட்டமன்றச் செயலாளர் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் உரிய பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version