திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரி நடைபாதை வழியாகச் செல்லும் பக்தர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
அலிபிரி மெட்டு நடைபாதையில் உள்ள நரசிம்ம சுவாமி கோயில் அருகே, சிறுத்தை ஒன்று நடமாடியதை யாத்திரீகர்கள் கண்டனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினரும், கோயில் பாதுகாப்புப் படையினரும் சிறுத்தையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பக்தர்கள் யாரும் தனியாகவோ அல்லது சிறிய குழுக்களாகவோ நடக்க வேண்டாம். 20 முதல் 30 பேர் கொண்ட பெரிய குழுக்களாக இணைந்து மட்டுமே நடைபாதையில் செல்ல வேண்டும்.
சிறிய குழந்தைகளைத் தனியாக நடக்க விடாதீர்கள். எப்போதும் உங்கள் கைப்பிடியிலோ அல்லது பாதுகாப்பாகத் தோளிலோ குழந்தைகளை வைத்திருங்கள்.
மாலை நேரத்திற்குப் பிறகு நடைபயணம் மேற்கொள்பவர்கள், பாதுகாப்புப் படையினரின் வழிகாட்டுதல்படி மட்டுமே செல்ல வேண்டும். அந்தப் பாதையில் வனத்துறையினரும், பாதுகாப்புப் பணியாளர்களும் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்றும், தேவஸ்தானம் அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றி பக்தர்கள் அச்சமின்றி மலையேறலாம் என்றும் கோயில் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
