மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு திட்டமிட்டிருந்த வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த வருகையின்போது புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் உயரிய ‘கலர்’ விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்க இருந்தார். புதுச்சேரி காவல்துறையின் நீண்டகால சிறப்பான சேவை, ஒழுங்கு முறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பைப் பாராட்டும் வகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த உயரிய விருதை அறிவித்துள்ளார்.
வருகிற சனிக்கிழமை மாலை கோரிமேடு காவலர் மைதானத்தில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மத்திய அமைச்சர் அமித் ஷா விருதை வழங்கி காவலர்களை கௌரவிக்க இருந்த நிலையில், அவரது வருகை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்று தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரத்து முடிவுக்கு முக்கிய காரணமாக நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது.
நாடு தழுவிய அளவில் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. இந்தச் சூழலில் மத்திய அமைச்சரின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி காவல்துறைக்கு கிடைத்துள்ள இந்த விருது, யூனியன் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் அவர்கள் ஆற்றிய பங்கை உறுதிப்படுத்துகிறது. விழா ஏற்பாடுகள் மாற்றப்பட்டு, பிற அதிகாரிகள் மூலம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
