நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று 33வது நாளை எட்டியுள்ளது. போராட்டக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்து ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரும் வன்முறையில் முடிவடைந்தது. போலீஸார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயமடைந்தனர். இருப்பினும், ஜந்தர் மந்தரில் தொடரும் போராட்ட மைதானத்தில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் பாஜகவுக்கு பெரும் சவாலாக அமைந்தது. நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் இந்த விவகாரத்தில் தங்களது எதிர்ப்பை பல்வேறு முறையில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் முக்கியப் பதிவொன்றை வெளியிட்டார். “இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் மிக முக்கியம். மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்ட அவர், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். குற்றமிழைத்த அனைவருக்கும் கடும் தண்டனை உறுதி செய்யப்படும் என்றும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமரின் இந்தப் பதிவை வரவேற்று, “மாணவர்கள் நலனில் எந்தச் சமரசமும் கிடையாது. குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது” என்றார். மேலும், அடுத்த ஆண்டு முதல் அனைத்து தேர்வுகளும் முழுமையாக கணினி அடிப்படையிலான (CBT) முறையில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு பயன்படுத்தி கலவரத்தைத் தூண்ட முயல்வதாக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இளைஞர் சக்தியை தவறான பாதையில் செலுத்தக் கூடாது என்று எச்சரித்த நயினார் நாகேந்திரன், அனைத்து கட்சிகளும் அரசியல் பேதங்களைத் தாண்டி மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version