அமோனியா வாயு கசிவு வழக்கில் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் என்னும் இடத்தில் செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், ஜூன் 21 ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, இதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர் ஜோசப் ஜெகன், தண்டையார்பட்டியைச் சேர்ந்த  மோகன், தொழிற்சாலை மேலாளர் டேனியல் மற்றும் தொழிலாளர் முகவர் சுரேஷ் ஆகியோரை திருவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன் மற்றும் மோகன், மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங்  ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

மனுதரார் தரப்பில் வழக்கறிஞர், கடந்த 50 நாட்களுக்கு மேல் சிறையில்  உள்ளதாகவும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனை ஏற்பதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து உத்தரவிட்ட நீதிபதி குமரப்பன், உயிரிழந்தவர்கள் ஒவ்வொரு நபர்களுக்கும் பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். காயமடைந்த நபர்களுக்கு இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்து பின்னர் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகவும்,

இப்போது அளிக்கின்ற இழப்பீட்டுத் தொகை எதிர்காலத்தில் வேறு ஏதேனும் இழப்பீடுகள் அரசு அல்லது விசாரணை ஆணையம் நிர்ணயித்தால் அதற்கு தற்போது வழங்கும் இழப்பீடு தொகையை  கட்டுப்படுத்தாது வேறு இழப்பீடுகளை பெற உயிரிழந்தவர்கள் குடும்பங்கள் பெறுவதற்கு தகுதி உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version