ஆந்திரப் பிரதேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசு சுகாதாரத் துறைக்கு உயர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கடப்பா மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அனைத்து மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளும் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்களிடமிருந்து உடனடியாக மாதிரிகள் சேகரித்து ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசின் ஒருங்கிணைந்த கண்காணிப்பு தளத்தில் காலதாமதமின்றி பதிவேற்ற வேண்டும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனை வசதிகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் வார்டுகள், ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அவசர மருத்துவ ஆம்புலன்ஸ் சேவைகள் முழுமையாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் புதிய வைரஸ் மாறுபாடுகளை கண்டறியும் மரபணு வரிசைப்படுத்தல் (Genome Sequencing) பரிசோதனைக்காக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய வகை வைரஸ்கள் பரவுகிறதா என்பதை விரைவாக கண்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, பொதுமக்கள் தேவையற்ற பதற்றம் அடைய வேண்டாம் என்றும், காய்ச்சல் அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம் என்றும் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version