அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுவரும் ஞானசேகரன் மீதான் குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்முறை செய்தார். பல்கலை வளாகத்திலேயே நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, ஞானசேகரரின் தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அடிப்படையாக வைத்தே ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும், அந்த வழக்கில் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பில்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ஞானசேகரனுக்கு எதிராக திருட்டு உள்ளிட்ட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.
