பாஜகவில் இருந்து விலகல் கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படும் அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை, தனது அடுத்த செயல்திட்டத்தை நாளை அறிவிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணி செய்து கொண்டிருந்த அண்ணாமலை, கடந்த 2019ஆம் ஆண்டு தனது ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்து விட்டு, தனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டதோடு, இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வந்தார்.
தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவருக்கு மாநில துணைத்தலைவர் பதவியும், தொடர்ந்து 2021-இல் மாநிலத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.
அப்போதைய ஆளும் திமுகவுக்கு எதிராக அண்ணாமலை நடத்திய போராட்டங்களும், அவர் மேற்கொண்ட என்மண் என் மக்கள் யாத்திரையையும் பாஜகவை தமிழக்கத்தின் குக்கிராமங்களில் கொண்டு சேர்த்ததோடு, பாஜகவில் உள்ள இளைஞர்களின் ஆதர்சன நாயகனாக அண்ணாமலை மாறியிருந்தார்.
2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தபோதும் அவர் மீதான விளம்பர வெளிச்சம் குறைந்தபாடில்லை. தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்தியதில் அண்ணாமலையின் பங்கு முக்கியமானதாகும்.
இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நிலைப்பாட்டின் காரணமாக அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவரானார்.
அப்போது தமிழக பாஜகவுக்குள் எழுந்த விரிசல் நீருபூத்த நெருப்பாக இன்றுவரையும் நீடித்து வருகிறது. இதன்பின்னர் தனது செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்ட அண்ணாமலை, 2026 சட்டமன்ற தேர்தலில் தனக்கு வழங்கப்பட்ட எம்.எல்.ஏ சீட்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட சைலண்ட் மோடுக்கு அண்ணாமலை சென்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் அண்ணாமலை அன்னியன் அவதாரம் எடுத்திருப்பதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்டமாக பாஜகவில் இருந்து தன்னை விடுவிக்கும் வரையில் அதனது பொறுப்புகள் முதல் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்தில் இருந்து விடுவிக்கும் வகையில் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நிபின் நவினிடம் ராஜினாமா கடித்தத்தை கொடுத்துவிட்டார். இதன் பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய பொதுச் செயலளர் ஆகியோரை சந்தித்துப் பேசி விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியாக தமிழ்நாட்டில் இருந்து நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் அண்ணாமலை தனது பிடிவாதத்தில் இருந்து விலகவில்லையாம்.
இன்று (ஜூன்4) அண்ணாமலையின் பிறந்தநாளில் தனது அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கூறப்பட்டு வந்த நிலையில், இன்றல்ல நாளைதான் முடிவை அறிக்க உள்ளதாக உறுதியாகி உள்ளது.
நாளை செய்தியாளர்களைச் சந்தித்து தனது முடிவை அண்ணாமலை அறிவிக்கிறார். புதிய கட்சியைத் தொடங்குவதை விட முதலில் ஒரு இயக்கத்தை தொடங்கி சில மாதங்களுக்கு அதனைக் கொண்டு சென்று, அஸ்திவாரத்தை உறுதி செய்துவிட்டு அதனை கட்சியாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியாக அறிவித்தால் தமிழக மக்கள் கட்சி அல்லது தமிழக மக்கள் கழகம் என்றோ, இயக்கமாகத் தொடங்கினால் நடத்தி வரும் வீ தி லீடர்ஸ்’ அறக்கட்டளையையே இயக்கமாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்தை மூன்று முறை சந்தித்து தனது புதிய முடிவு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் ரஜினியை முன்னிறுத்தி இயக்கத்தை செயல்படுத்தலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பாக கோவையில் ரஜினி ரசிகர்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையின் அதிரடி முடிவு, நாளை தமிழக அரசியல் களத்திற்கு மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தலாம்.
