பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

தூத்துக்குடி: வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று, மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பெண்கள் பாதுகாப்பு குறித்த கடும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே வசிக்கும் 33 வயது இளம்பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 29 வயது பாலமுருகன் என்பவர் தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது ஜெயபால் தவெக நிர்வாகி ஆவார். இவர்கள் இருவரும் இரு நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அவரைத் தங்க வைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அளித்து, இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. மயக்கம் தெளிந்த பின்னர் அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் பிரச்சாரத்தில் பெண்கள் பாதுகாப்பைப் பேசிய விஜய், தன் கட்சியினரே இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபடுவதற்கு என்ன பதில் சொல்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுக பாதையில் பயணிப்பதா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவெக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பலவும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, குற்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version