குறைந்த விலையில் தங்கம் வழங்குவதாகக் கூறி 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்த விவகாரத்தில் பெண் காவல் ஆய்வாளருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய ஷீலா மேரி தனது உறவினரான பிரபு மணி மூலமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், குறைந்த விலையில் தங்க காசுகள் என பல்வேறு முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.
கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பிரபு மணி பெரும்பாலும் ஆய்வாளர் ஷீலா மேரியின் காவல்துறை வாகனத்தில் வைத்து, தங்கக் காசுகளை வழங்கியுள்ளார். குறிப்பாக இவர்களிடம் போலீஸாரும், போலீஸ் அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தை 2024 இறுதியில் மூடிவிட்டு பிரபுமணி தலைமறைவாகிவிட்டார். இவரிடம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
மொத்தம் 20 கோடி வரை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதல் கட்டமாக பிரபுமணி மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியும் மோசடிக்கு உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டதால், அவர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தங்க நகை மோசடி வழக்கு விவகாரத்தில் சிக்கிய காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி குமரப்பன் முன்பு நடைபெற்றது.
அப்போது காவல்துறை தரப்பு வழக்கறிஞர் ஆய்வாளர்ஷீலா மேரிக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆய்வாளரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
