சர்வதேச கால்பந்து வரலாற்றில் இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் அர்ஜென்டினாவும் போர்ச்சுகலும் நேருக்கு நேர் மோதியதே இல்லை. உலகெங்கும் உள்ள மில்லியன் கணக்கான கால்பந்து ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பமான மெஸ்ஸி – ரொனால்டோ இடையேயான இந்த உலகக்கோப்பை மோதல், நடப்பு 2026 பிஃபா உலகக்கோப்பைத் தொடரில் நிஜமாக அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மோதல் சாத்தியமாவது எப்படி? 2026 உலகக்கோப்பையின் புதிய 48 அணிகள் கொண்ட விதிகளின்படி, நடப்பு உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி குரூப்-J பிரிவிலும், போர்ச்சுகல் அணி குரூப்-K பிரிவிலும் இடம் பிடித்துள்ளன.
காலிறுதியில் இவர்கள் மோத வேண்டும் என்றால், பிஃபா விதிகளின்படி ஒரு அணி தனது பிரிவில் முதலிடமும், மற்றொரு அணி தனது பிரிவில் இரண்டாம் இடமும் பிடிக்க வேண்டும். (இரு அணிகளும் முதலிடம் பிடித்தால் இறுதிப்போட்டியில் மட்டுமே மோத முடியும்).
அதன்படி, ஒரு அணி முதலிடமும் மற்றொரு அணி இரண்டாம் இடமும் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற பின், அடுத்து வரவிருக்கும் 32-வது சுற்று மற்றும் 16-வது சுற்று ஆகிய இரண்டு நாக்-அவுட் போட்டிகளிலும் இரு அணிகளும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இந்த அனைத்து நாக்-அவுட் போட்டிகளிலும் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவும், ரொனால்டோவின் போர்ச்சுகலும் வெற்றி நடை போட்டால், வரும் ஜூலை 12 அன்று மியாமி நகரில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும்.
மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகிய இருவருக்குமே இதுவே கடைசி உலகக்கோப்பைத் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தச் சாத்தியக்கூறு ஒட்டுமொத்த உலகக் கால்பந்து ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
