Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தம்பிகளே… அண்ணா எங்கே?
    Featured

    தம்பிகளே… அண்ணா எங்கே?

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 2, 2026Updated:February 2, 2026No Comments8 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CN Annadurai the founding president of the DMK an 1725391235499
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அண்ணா நகர் உண்டு.. தமிழ் நிலமெங்கும் அண்ணா சிலைகள் உண்டு… சென்னையில் அண்ணா நகரும் உண்டு, அண்ணா மேம்பாலமும் உண்டு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் உண்டு, அண்ணா பல்கலைக்கழகமும் உண்டு. அவர் தொண்டனாக இருந்த இயக்கம் இப்போதும் இருக்கிறது. அவர் ஆரம்பித்து வைத்த கட்சி இப்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. அவர் பெயரிலான கட்சி எதிர்கட்சியாக வலம்வருகிறது. ஆனால் தமிழர் இல்லங்களில், அவர் வழிவந்த கட்சித் தொண்டர்களின் உள்ளங்களில் அண்ணா இருக்கிறாரா? என்பதே அவரது 57-வது நினைவுதினத்தில் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி.

    ba8a3983658e748529df5fe82757c6b01708278880647572 original

    “காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான் – கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்”, “அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா” என உச்சஸ்தாயியில் ஒலிக்கின்றன வீதிதோறும் அண்ணாவைப் பற்றிய பாடல்கள். அவரைப் போல பேசிக்காட்டும் குரல் கலைஞர்கள் மேடைதோறும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது சிலைகள் ரோஜாப்பூக்களுக்குள் புதைந்து கிடக்கிறது. அவரது இறுதி துயிலிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த தினத்தின் ஒரு சடங்கு போல இவை ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தப்படுகின்றன. மறுநாள் பூக்கள் உதிர்ந்து விடும் – உலர்ந்து விடும். குரலிசைக் கலைஞர்கள் வேறு மேடைகளில், வேறு குரல்களில் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அண்ணா எங்கு இருப்பார்? எப்படி அவரை நினைவுப்படுத்திக் கொள்கிறீர்கள்?

    annakamaraj6001

    தமிழ்நாட்டின் அரசியல் திசையையே மடைமாற்றிப் போன ஒரு பேரறிஞன் வெறும் 57 ஆண்டுகளில் எப்படி புராதானமாகிப் போனான். அவனது கொள்கைகள் – சிந்தனைகள் – மொழிப்பற்று போன்றவை வெறும் சொற்களாகி ஒரு பிம்பத்திற்குள் கட்டமைக்கப்பட்டு அதுவும் தனிமைப்படுத்தப்பட்டு மறக்கப்பட்டு விட்டதற்கு யார் காரணம்?. “என்னது? எங்கள் தலைவரை நாங்கள் மறந்தோமா? யாரடா நீ அற்ப பதரே?” என்று எவரேனும் முஷ்டி மடக்கி வந்தால், குத்து வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னர் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது.

     

    அடித்தட்டு மக்களின் வாழ்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தன் வாழ்நாளெலாம் போராடிய அவரின் பெயரால் அமைந்துள்ள நகரில் மேல்தட்டு (பொருளாதார ரீதியாக) மக்களைத் தாண்டி வேறு ஒருவரால், ஒரு சதுர அடி நிலம் கூட வாங்க முடியாது. சென்னையிலேயே நல்ல விலை போகக்கூடிய நிலங்களில் அதுவும் ஒன்று…ஆம், அதுதான் அண்ணா நகர். (எப்போதும் விலை போகக்கூடிய சரக்கு அண்ணா என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா?) இந்த முரண் தான் அண்ணாவின் தற்போதைய நிலை. அவர் அமைத்துக் கொடுத்த படிகளில் ஏறி பீடத்தில் அமர்ந்து கொண்டவர்கள்… அந்த பாதையை மறந்து போனார்கள் அல்லது பிரிந்து போனார்கள், ஒட்டுமொத்தமாக இழந்து போனவர்களும் உண்டு. அண்ணாநகரில் இடம் வாங்க முடியாத சாமான்யன் போலத்தான், அண்ணாவின் கொள்கைகளும் – சிந்தனைகளும் எட்ட முடியாத உயரத்துக்கு சமகால அரசியல் வந்து நிற்கிறது.

    “என்னங்க, இப்பிடிச் சொல்லிட்டீங்க, தலிவர் எப்போ பொறந்தாரு, எப்போ ஜெயிச்சாரு, எப்போ செத்தாரு எல்லா தகவலும் விரல் நுனில வச்சிருக்கேன் தெரியுமா?” என்று காற்றில் கத்தி சுத்திக் கொண்டு வருபவர்களுக்கு… அண்ணாவைப் பற்றிய தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் தெரிந்து வைத்திருப்பதால் ஒருவர் அவரை பின்பற்றுபவர் ஆகிவிட முடியாது. எழுத்துக்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பதால் ஒருவனை கவிஞன் என்று கூறிவிட முடியுமா என்ன?.

    7664D668 A5EE 446E 9805 C11D6FE6C399

    பேரறிஞர் அண்ணாவின் மிகச்சிறந்த பண்பு நலன்களில் ஒன்று மாணவர் தொடர்பு. காஞ்சியில் நகராட்சி எழுத்தராக இருந்தது முதல் தமிழ்நாட்டின் தலையெழுத்தை எழுதும் முதலமைச்சராக ஆனது வரை அவர் தொடர்ந்து மாணவ சமுதாயத்திடம் உரையாடிய படியே இருந்தார். குறிப்பாக அண்ணா என்ற ஆளுமை ஒரு பெருந்தீயாக மூண்டது மாணவர்களிடத்தில் தான். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், குடந்தை கல்லூரிகளில் அவர் பேசிய பேச்சுக்கள் தான் அதுவரை காங்கிரஸ் இயக்கங்களிலும், கம்யூனிச இயக்கங்களிலும் ஈடுபாடு காட்டி வந்த அன்றைய இளைஞர்களை நீதிக்கட்சியின் பால் திருப்பியது. அவர்களே பின்னர் திராவிட இயக்கத்தில் கருஞ்சட்டை வீரரர்களாக மாறினர். இயக்கம் கட்சியாக மலர்ந்த போது தொண்டர் படையாக மாறினர். அண்ணாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தனர்.

    medium 18 2401b96d9e

    இன்றைய அரசியல் கட்சிகளில் எத்தனை பேர் மாணவர்களிடத்தில் உரையாடுகிறார்கள். இளைஞர்கள் வழிதவறி போகிறார்கள், அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எட்டநின்று புத்தி சொல்லும் இடத்தில் தானே இருக்கின்றன இன்றைய அரசியல் கட்சிகள். சமூக நீதி, மொழிப்பற்று, இடஒதுக்கீடு, பகுத்தறிவு என்று அண்ணா அவர்கள் மாணவர்களிடத்தே பேசிப்பேசி அவர்களின் சிந்தனை போக்கை வடிவமைத்தார். இன்று மாணவர்களிடத்தில் பேசுவதற்கு கூட அரசியல் கட்சிகளுக்கு நேரமில்லை. கடைசியாக எப்போது ஒரு பல்கலைக்கழகத்தில் போய் ஒரு அரசியல் கட்சித் தலைவர் பொதுவான தளத்தில் மாணவர்களிடம் உரையாடி இருக்கிறார். நினைவு படுத்திக் கூறுங்கள் பார்ப்போம், இல்லை. அதுதான் பதில்.

    அந்த உரையாடல் தொடர்பு அற்றுப் போனதால் தான், தங்களுக்கு உகந்த – தங்களுக்கு பிடித்த அரசியல் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கடன்பெற்று அவைதான் உண்மையான அரசியல் களம் என்று நம்பி இன்றைய இளைஞர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். அரசியல்வாதிகளும் – மாணவர்களும் உரையாடல் நின்று போனதால் தான், நடிகர்களின் அரைகுறை பேச்சுக்களை மாணவர்கள் தங்களுக்குள் உரையாடி அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் எதிர்தரப்பில் போய் நிற்கிறார்கள்.

    ஜல்லிக்கட்டு போராட்டம் துவங்கி தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற விதவிதமான போராட்டங்களில் திரளும் இளைஞர்கள் ஒருசார்பு நிலையெடுக்க இதுதான் காரணம். ஒருவேளை இன்றைய காலகட்டத்தில் அண்ணா இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள், தொழில்நுட்பம் பெருகிவிட்ட இக்காலத்தில் அதனையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி இன்னும் கூடுதலாக மாணவர்களிடத்தே உரையாற்றி இருப்பார் என்றே நினைக்கிறேன். அண்ணா நடைபோட்ட பாதையில், தற்போது தேசிய கட்சிகள் வடநாட்டில் நடந்து பார்க்கின்றன. மாணவர் இயக்கங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அவர்களிடத்தே தங்கள் கருத்துக்களை விதைத்து அவை அறுவடை செய்கின்றன. பிராந்திய கட்சிகள் தான் கடந்து வந்த பாதையை மறந்து போய் நிற்கின்றன. கொஞ்சம் கண் திறந்து பார்த்தாலே இந்த உண்மை புரியும்.

    annadurai

    ஜமீன்தார்களின் அரண்மனைகளிலும், செல்வ சீமான்களின் கோட்டைகளிலும் பேசப்பட்டு வந்த அரசியலை அடித்தட்டு மக்களிடத்தில் கொண்டு சென்றது தான் அவரது தனிச்சிறப்புகளில் ஒன்று. ஊருக்கு ஒரு பெரிய மனிதர், அவர் சொல்கிற நபருக்கு ஆதரவு என்றுதான் அக்காலகட்டங்களில் அரசியல் இருந்தது. ஊரில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் ஒரு அரசியல் இயக்கம் தான் என்ற புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணா. ஜனநாயகத்தின் விழுமியங்களை கடைக்கோடி வரை கொண்டு போய் சேர்த்தார். அதனால் தான் பெற்றோர்கள் ஒரு கட்சிக்கு வாக்களிக்க, பிள்ளைகள் வேறு ஒரு கட்சிக்கு வாக்களித்தனர். இன்றைக்கு மிக சாதாரணமாக தோன்றும் இவ்விஷயத்தை அன்று நடைமுறைப்படுத்தியது அவ்வளவு சாதாரணமானதல்ல. இதனை சாதித்துக் காட்டியவர் அண்ணா.

    அண்ணா அரசியல் வளர்த்த இடங்கள் ஆச்சர்யபடுத்துகின்றன.. திருமண மண்டபங்கள், முடி திருத்தகங்கள், தேநீர் கடைகள், நூலகங்கள்.. இந்த நான்கையும் தூணாக்கித் தான் திராவிட சித்தாந்தத்தை கட்டி எழுப்பினார் அண்ணா. ஆம், இந்த நான்கு இடங்களிலும் தொடர்ந்து அரசியல் பேசினார், பேச வைத்தார். சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தாலும், இயக்கத்தினரின் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் பங்கு கொண்டாலும் தமிழினத்தின் பெருமையை, சுயமரியாதையின் முக்கியத்துவத்தை, பெண்உரிமையை விதைத்துக் கொண்டே சென்றார். அவருக்கு முன்னதாக திருமணங்களில் அரசியல் பேசியதாக வரலாறு இல்லை. அவர் ஆரம்பித்து வைத்த அந்த பாரம்பரியத்தை தான் இன்றளவும் பல கட்சிகள் பின்பற்றி வருகின்றன. ஆனால், அவரின் சாரத்தை மறந்து போயின. இல்ல நிகழ்விலும் உள்ளத்தில் கொள்கையை தைக்க முடிந்தது அவரால். விளம்பரங்களிலும், ஜொலிக்கும் விளக்குகளிலும் மூழ்கி போனது தான் இன்றைய கட்சிகளின் நிலைமை. மறுக்க முடியுமா?

    indira kamaraj anna together

    தீண்டப்படாதோர், தாழ்த்தப்பட்டோர் என்று சமூகம் விலக்கி வைத்த ஜனங்களின் மத்தியில் எளிமையாக சென்றமர்ந்தார். எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே என்ற பாரதியின் பாடலை நடைமுறையில் சோதித்து பார்த்தவர் அண்ணா. எல்லோருக்கும் வாக்குரிமை என்றாகிவிட்ட நாட்டில், அவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தினால் தான் சமூகநீதி நிலைநாட்டப்படும் என்ற உண்மையை வேறு யாரை விடவும் நன்றாக புரிந்து கொண்டதால் தான் முடி வெட்டும் நிலையங்களில் களிம்பு படிந்த மூளைகளையும் வெட்டச் செய்தார். தலைமையின் குரலாக தன்னுடைய பிரதிநிதிகளை ஊர்ஊராக இப்படி பேச வைக்க முடிந்தது அவரால். இன்று, வார்டு கவுன்சிலர் கூட ஃபார்ச்சூனர் காரில் வலம் வருகிறார். அவர் எங்கே முடி வெட்டும் கடைக்கு போவது. போதாக்குறைக்கு முடிவெட்டும் நிலையங்கள் கூட கார்ப்பரேட் மயமாகிவிட்ட சூழலில் பேசுவதற்கான புதிய தளங்களை இன்றைய அரசியல்வாதிகள் கண்டடைய முடியாமல் போனது ஏன்?. அன்றைய காலகட்டத்திற்கு அது தேவைப்பட்டது, இன்று தேவைப்படவில்லை என்று மொண்ணையாக சால்ஜாப்பு சொல்லக்கூடாது. இன்னும் பேச வேண்டிய தேவை இருக்கிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னைவிடவும் சாதிய பெருமைகளை வெளிப்படையாக பேசித்திரியும் நாட்டில், ஆணவக் கொலைகள் அன்றாடம் நடைபெறும் நாட்டில் இத்தகைய உரையாடல்கள் மிகமிக அவசியம். இதனை கற்றுக் கொண்டார்களா தம்பிகள், அண்ணனிடத்தில்..

    இரட்டைக் குவளைகளா? இன்றுமா இருக்கிறது? என்று கண்களை மூடிக்கொண்டு கடந்து செல்லும் சமூகத்திற்கு நாம் பழகிவிட்டோம். ஆலய நுழைவு போராட்டங்களும், இரட்டைக் குவளை எதிர்ப்பு போராட்டங்களுக்கும் வித்திட்ட காலத்தைச் சேர்ந்தவர் அண்ணா. சமூக கொடுமைகளை கண்டு ஏற்றுக் கொள்ளாமல் அதனை பக்குவமாய் பேசி பகுத்தறிவை ஊட்டச் செய்தார். இன்று வலைதளங்கள் எங்கும் சுயசாதி பெருமிதங்கள் மலிந்து கிடக்கின்றன. அண்ணா வழிவந்த கட்சிகள் அல்லது அண்ணாவை நினைவில் கொண்டுள்ள கட்சிகள் இதற்கு என்ன செய்திருக்க வேண்டும். சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கிய அண்ணா, கலப்பு திருமணங்களுக்கு முன்னுரிமை கொடுத்த அண்ணா, இப்போது சாதியின் பெயரால் நடைபெறும் அவலங்களுக்கு என்ன தீர்வு சொல்லி இருப்பார் என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? செய்கிறார்களா நம் அரசியல்வாதிகள். ஏன் செய்யவில்லை?

    நூலகங்கள். இருப்பதிலேயே பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் இவைகள் தான். ஒவ்வொரு குக்கிராமத்திலும் திறக்கப்பட்ட படிப்பகங்கள் இன்று எங்கே போயின? குறைந்தபட்சம் அனைத்து நாளிதழ்களையும் ஒருசேர வாசித்து எழுந்து போகும் ஊர்மக்கள் எங்கே? எல்லாம் டிஜிட்டல் மயமாகி விட்டது, இன்னும் எதற்காக பழைய பஞ்சாங்கத்தை பாடிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பலாம். ஒரு இனத்தை அழிப்பதற்கு நூலகத்தை அழித்தால் போதுமானது என்பதை நம் காலத்திலேயே நாம் பார்த்துள்ளோம். அப்படி இருக்கும் போது படிக்கும் பழக்கத்தை, விவாதிக்கும் பழக்கத்தை, கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கிய அண்ணா எவ்வளவு தொலைநோக்கு பார்வையுள்ளவர். இன்று எதற்கெடுத்தாலும் வன்முறை, பட்டாக்கத்திகளுடன் வலம் வருவதும், பிறந்தநாள் கேக்கைக் கூட அரிவாளால் வெட்டி மகிழ்வதும் படிப்பை மறந்த ஒரு தலைமுறையின் மாற்றமல்லவா? இதனை மாற்ற இந்த அரசியல் கட்சிகள் என்ன செய்தன?

    perarignar anna

    இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடவுள் குறித்த நிலைப்பாடு. பெரியாரின் வழிவந்த தொண்டர் தான் பேரறிஞர் அண்ணா. நாத்திக மேடைகளில் சங்கநாதம் செய்தவர் தான். கம்பரசம் எழுதி தெறிக்க விட்டவர் தான் அண்ணா. கொண்ட கொள்கையில் இருந்து ஒருநாளும் நெறிபிறழாத அவர் வந்தடைந்த பக்குவம் தான், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது. இதற்கு பொருள் அவர் இறைமறுப்புக் கொள்கையில் இருந்து விலகி கடவுளை ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. திராவிடர் கழகம் என்பது பகுத்தறிவு ஆயுதத்தை கையில் ஏந்தி முற்றிலுமாக இறைமறுப்பில் நின்று பேசிய இயக்கம். அதன் அரசியல் நகர்வாக அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அந்த கொள்கை உண்டா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அண்ணா அளித்த பதில் தான் அது. “நான் கைலி கட்டாத முஸ்லீம், சிலுவை அணியாத கிறிஸ்துவன், விபூதி பூசாத இந்து” என்பது இதன் நீட்சியாக அவர் சொன்னது.

    மத நல்லிணக்கம் என்பது வேறு, மதத்தின் அடையாளங்களை தரித்துக் கொள்வது என்பது வேறு. மத நம்பிக்கையில் ஆழ்ந்து முழுவதுமாக அதனை பின்பற்றுவது என்பது வேறு. ஆனால் இன்று அவர் வழிவந்த கட்சிகள், இந்த கொள்கையில் வந்து நிற்கும் புள்ளி எது. கட்சிகள் பாகுபாடின்றி இப்தார் நோன்பில் பங்கு கொள்கிறார்கள், தேவாலய பெருவிழாக்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள், இந்து கோயில்களின் குடமுழுக்கில் புனிதநீர் தெளித்துக் கொள்கிறார்கள். தவறில்லை, ஆனால் பகுத்தறிவு என்ற ஆயுதத்தை புளித்து போக செய்து விட்டார்கள் என்பதே உண்மை. தீ மிதித்தலும், அலகு குத்திக் கொள்ளுதலும், பால்குடம் எடுப்பதும், ஆன்மீகவாதிகள்(?) மடங்களுக்கு சென்று ஆசிர்வாதம் வாங்குவதும் என எந்த ஏணி வழியாக இந்த இடத்திற்கு வந்து நின்றார்களோ, அதனை கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்க நேரமில்லை. அதற்காக இறைமறுப்பாளர்களாக இருக்க வேண்டும், மதநம்பிக்கைகளை – கடவுள்களை பழித்துப் பேசவேண்டும் என்று கூறவில்லை. அண்ணா பாணியில் சொல்வது என்றால், “பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் – பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்” என்பதை நினைவிலாவது வைத்துக் கொண்டதுண்டா என்று தான் கேட்கிறேன்.

    9 2114cdc9af

    “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற வார்த்தையை தம்பிக்கு கடிதம் என்ற அண்ணாவின் வார்த்தைகளில் தோய்த்து எடுத்தாண்டார் திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி. “உங்களால் நான் – உங்களுக்காக நான்” என்ற வார்த்தை 1967-ல் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற சமயத்தில் வானொலியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். அதனைத் தான் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் தன்னுடைய வார்த்தையாக்கினார். இந்த இரண்டு சொற்களும் ஏன் இந்த அளவு வரலாற்றில் நிலைபெற்று இருக்கிறது என்றால் அதன் மூலகர்த்தா பேரறிஞர் அண்ணா என்பதால் தான். தமிழ்நாட்டின் ஆளுமை மிக்க தலைவர்கள் என்று மறைந்த இரண்டு பேர்களையும் குறிப்பிடுகிறோம். அவர்களே அண்ணாவிடம் கடன்பெற்று வார்த்தைகளை பயன்படுத்தினார்கள் என்றால், இன்றுள்ள தலைவர்கள் தங்களின் மொழியாளுமை குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

    anna funeral

    இனம் – மொழி என்பவை அண்ணாவின் இருகண்கள். இன்றுள்ள அரசியல் கட்சியினர், ஏன் தமிழக மக்கள் கூட இவ்விரண்டு விஷயத்தில் எந்த அளவு கொள்கைப்பாட்டுடன் உள்ளனர். ஒருபக்கம் அதீத இனமோகம் – மொழிவெறி. மறுபக்கம் இனம் குறித்த அலட்சியம் – மொழியை மறந்த ஞானசூன்ய நிலை. இரண்டுமே தவறல்லவா? தீந்தமிழ் சொற்களில் தென்றலாகவும், சண்டமாருதமாகவும் வீசிய அண்ணா தான், யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். பிறமொழிபால் வெறுப்பு காட்டினாரா அண்ணா? இல்லை, தாய்மொழி மீது பற்றுக் காட்டினார் என்பதுதான் இதன் பொருள். இன்றுள்ள அரசியல் கட்சியினர் இவ்விஷயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை வைத்துள்ளனர் என்பது அவர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழினத்தின் பெருமை பேசுவது என்பது தேசப்பற்றுக்கு எதிரான செயலா? என்ற குழப்பத்தில் இன்றைய சமூகம் வந்து நிற்கிறது. அதிலுள்ள வேறுபாட்டை எடுத்துச் சொல்ல வேண்டிய அரசியல்கட்சிகள் அதன்மூலம் ஆதாயம் தேடிக் கொண்டு வருகின்றன. மும்மொழிக் கொள்கை முக்கியத்துவம் பெறும் காலத்தில் தமிழ்மொழிக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டாமா தற்போதுள்ள கட்சிகள்?

    37353509 1029817697178100 6737084381950640128 n

    இறுதியாக, தமிழ்நாட்டின் தலைமகனாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இரண்டாண்டுகளில் அவர் புரிந்த சாதனைகளைப் பற்றி மட்டும் பேசி அண்ணாவை குறுக்கி விடக் கூடாது. பொதுவாழ்வில் அவர் போராடிய நாற்பதாண்டுகளை தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், சாதிய ஏற்றத்தாழ்வுகள் இயல்பென இருந்த காலத்தில் பகுத்தறிவு வாளேந்தி, சுயமரியாதைச் சுடராய், தேனருவி தமிழாய் வலம் வந்த அந்த அண்ணாவைத் தான் இன்றைய தலைமுறை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    இப்போது கூறுங்கள், தம்பிகளே… அண்ணா எங்கே?

    விடைதேடுங்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத வன்முறையை தூண்டும் பாஜக; துணைப்போகும் அதிமுகவின் சதியை முறியடிப்போம்!. முதல்வர் ஸ்டாலின் மடல்!
    Next Article சிக்கலில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி!. ஐசிசிக்கு ரூ.200 கோடி இழப்பு?
    Editor TN Talks

    Related Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.