வரும் 18ம் தேதி தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் கூட்டத்தொடர் நடைபெற உள்ளநிலையில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்புப் புத்தாக்க பயிற்சி நாளை (ஜூன் 16)  தொடங்கப்படுகிறது.

தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ளது. சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதனடிப்படையில், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக, பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாதன் அர்லேகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

17வது சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நாளை (ஜூன் 16) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 17) என இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 05.30 மணி வரை சிறப்புப் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை (ஜூன் 16) தொடங்கி வைக்கிறார்.

பொதுவாக இந்த பயிற்சி வகுப்புகள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை நடைபெறும் புத்தாக்கப் பயிற்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்புகள் மட்டுமல்லாமல், ஏற்கனவே அனுபவமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருமே (இன்னாள், முன்னாள்) பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, சட்டமன்றப் பேரவையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், சட்டமன்ற பேரவை விதிகள் மற்றும் நடைமுறைகள், சட்டமன்ற உறுப்பினர் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து செயலாளர் துறை சார்ந்த அரசு துறைச் செயலாளர்கள், முன்னாள் சட்டப்பேரவை செயலாளர்கள் மற்றும் வல்லுநர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும், எதை பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட உள்ளது.  சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் எப்போது கேள்வி எழுப்ப வேண்டும், எந்த மாதிரியான கேள்வி எழுப்ப வேண்டும் என கூறப்பட உள்ளது. சட்டமன்றப் பேரவையின் விதிகள் மற்றும் நடைமுறைகளின் படி சட்டமன்றத்தில் உறுப்பினர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளது. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை எப்படி முறையாக எழுப்புவது, நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களில் எவ்வாறு பங்கெடுப்பது உள்ளிட்டவை குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version