தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், மத  நிகழ்ச்சிகள்  நடத்தக் கூடாது என்ற அரசு உத்தரவை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் மற்றும் சித்தாந்த ரீதியிலான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்று ஆண்டுதோறும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வேலூரில் உள்ள தனியார் பள்ளி மற்றும் சென்னையைச் சேர்ந்த  தனியார் பள்ளி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் அரசியல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற பிரிவுக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அதுவரை இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version