ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள முள்வாடி பகுதியில், ஆதிபராசக்தி கலை மற்றும் வேளாண்மை கல்லூரி நுழைவாயிலில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்று முன் தினம் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வங்கி ஊழியர்கள் அதன் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றனர். இந்நிலையில், நேற்று மாலை வங்கி மேலாளர் சீனிவாசன் ஆய்வு செய்ய வந்தபோது, ஏடிஎம் இயந்திரம் கேஸ் வெல்டிங் கருவி மூலம் துண்டிக்கப்பட்டு, உள்ளே இருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கல்லூரி பாதுகாப்பு காவலர்கள் பணியில் இருந்தபோதே, துணிகரமாக இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் தங்களின் அடையாளத்தை மறைக்க, ஏடிஎம் மையத்திற்குள் இருந்த சிசிடிவி கேமராக்கள் மீது கருப்பு மையினை அடித்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் சரக டிஐஜி மகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version