மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் – ஈரான் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஓமன் கடற்பகுதியில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற ‘எம்.டி மரைவெக்ஸ்’ (MT Marivex) என்ற வெளிநாட்டு எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் தீப்பற்றியதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து மற்றும் மீட்புப் பணிகள் குறித்து இந்திய மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் (MoPSW) முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதாவது, இன்று திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் ஓமன் நாட்டின் கடற்பகுதியில், ஹார்முஸ் ஜலசந்திக்குத் தெற்கே சென்றுகொண்டிருந்த போது இந்தக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் எந்தவித காயமுமின்றி தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என்று அமைச்சகத்தின் இயக்குநர் ஓபேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார். 

https://x.com/PTI_News/status/2063937743106048172?

இஸ்ரேல் – ஈரான் மோதலுக்கு நடுவே, இந்த எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் அல்லது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கப்பலின் எஞ்சின் அறையில் வெடிப்பு ஏற்பட்டு தீப்பற்றியதாகக் கூறப்படும் நிலையில், தாக்குதல் குறித்து முழுமையான மற்றும் துல்லியமான ஆதாரங்களைச் சேகரித்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மடகாஸ்கர் நாட்டுக் கொடியுடன் பயணித்த இந்த எண்ணெய் கப்பல், இந்தியாவின் கார்வாரில் இருந்து ஓமனில் உள்ள துக்ம் (Duqm) துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விபத்தின் போது கப்பலில் எந்தவிதமான எரிபொருளோ அல்லது சரக்குகளோ ஏற்றப்படவில்லை; அது காலியாகவே சென்றுள்ளது. மேலும், அதில் இந்திய மாலுமிகள் மட்டுமே இருந்துள்ளனர்.

https://x.com/FSUIINDIA/status/2063906198903251265?

கப்பலில் தீப்பற்றியதும் மாலுமிகள் அவசர உதவி கோரி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் இந்தியக் கடற்படை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை உடனடியாக ஒருங்கிணைந்து மாலுமிகளைப் பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

https://x.com/FSUIINDIA/status/2063906198903251265?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவினாலும், இந்தியாவின் பிற துறைமுகச் செயல்பாடுகள் எவ்வித பாதிப்புமின்றிச் சீராக இயங்கி வருவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மாலுமிகளின் குடும்பத்தினர் அவசரத் தகவல்களுக்குத் தற்காலிக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version