மிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் முதல்முறையாக 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டதையொட்டி, மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு பாராட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மின்வாரியத்தில் நிலவி வந்த டெண்டர் முறைகேடுகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் டெண்டர் மதிப்பீடுகளில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. 600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு டெண்டரில் மட்டும் சுமார் 397 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. 30 முதல் 35 சதவீதம் வரை ஏற்பட்ட நிதி கசிவை தடுக்கும் வகையில் புதிய டெண்டர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

புதிய நடைமுறையின்படி, சந்தை விலை மற்றும் உற்பத்தியாளர்களின் நேரடி விலையை அடிப்படையாகக் கொண்டு மூன்று தனித்துவமான குழுக்களின் பரிசீலனைக்குப் பிறகே டெண்டர் மதிப்பீடுகள் தயாரிக்கப்படும் என்றும், அடுத்த வாரம் முதல் மின்சார வாரியம் மற்றும் அதன் அனைத்து பிரிவுகளிலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

30 ஆயிரம் கோடி ரூபாய் வரை  சேமிப்பு

இந்த நடவடிக்கையின் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு சேமிப்பு ஏற்படும் எனவும், முறைகேடு கண்டறியப்பட்ட முந்தைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சார இணைப்புகளுக்கான அனுமதி வழங்கும் முறையில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தியதாகவும், அதை ஒழிக்கும் நோக்கில் புதிய வெளிப்படையான இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் நுகர்வோர்கள் மற்றும் சிறு மின் உற்பத்தியாளர்கள் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து அனுமதி பெற முடியும் என்றார்.

திட்டமிட்டு மின்வெட்டு 

மின்சார விநியோகம் தொடர்பாக பேசிய அமைச்சர், “தமிழகத்தில் தற்போது மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. உபரி மின்சாரத்தை மத்திய மின்தொகுப்பிற்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறோம். சென்னையில் சில பகுதிகளில் நிலவும் குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின்வெட்டு பிரச்சினைகளுக்கு பழைய டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் கேபிள்கள் சேதமடைந்திருப்பதே காரணம். அவற்றை சரிசெய்ய கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு 40 நிமிடங்களுக்குள் பழுதுகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சில இடங்களில் திட்டமிட்டு மின்சாரப் பெட்டிகளில் உள்ள பியூஸ்களை அகற்றி மின்வெட்டு ஏற்படுத்தும் நாசவேலைகள் நடைபெறுவதாகவும், சிசிடிவி காட்சிகள் மூலம் அவை கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிர்மல் குமார் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version