சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய சாலைத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தலை AI உதவியுடன் விரைவுபடுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) ‘ கும்டா ‘ முடிவு செய்துள்ளது.
சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வேகமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Web GIS தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) டெண்டர் வெளியிட்டுள்ளது
புதிய சாலை அமைக்க வேண்டுமென்றால், எந்தெந்த நிலங்கள் பாதிக்கப்படும், எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும், அதன் மதிப்பு என்ன என்பதைக் கண்டறிய அதிகாரிகள் தற்போது GIS உட்பட (( geographic information system – நில வரைபடத்துடன் , நில உரிமையாளர்கள் , நிலத்தின் தன்மை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும் ஆவணம் )) பல வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
இதற்கு தீர்வாக, அனைத்து நில விவரங்களையும் ஒரே டிஜிட்டல் வரைபடத்தில் காட்டும் Web GIS தளத்தையும், PDF மற்றும் AutoCAD (DWG) வரைபடங்களில் (( ஏற்கனவே)) உள்ள சாலைத் தகவல்களை செயற்கை நுண்ணறிவு மூலம் தானாக கண்டறிந்து, டிஜிட்டல் சாலைப் பதிவேடாக மாற்றும் அமைப்பையும் உருவாக்க CUMTA திட்டமிட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்தால், சாலைத் திட்டங்களுக்கான கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் தேவை, செலவு, பாதிக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட விவரங்களை மிகக் குறுகிய நேரத்தில் கணக்கிட்டு, திட்டமிடலை விரைவுபடுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தும் செலவை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க , திட்ட தாமதத்தை குறைக்க ,பல துறைகளின் தரவுகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்க AI மூலம் PDF மற்றும் DWG வரைபடங்களில் உள்ள சாலைத் தகவல்களை தானாக டிஜிட்டல் தரவாக மாற்றி, திட்டமிடலை வேகப்படுத்த இத்திட்டம் உதவும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையமான CUMTA சென்னை மாநகர எல்லை மட்டுமின்றி CMDA எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , ராணிப்பேட்டை மாவட்டங்களின் பல பகுதிகளையும் உள்ளடக்கி சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

