தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1939 ஆண்டு பிறந்த அவருக்கு தற்போது வயது 86.
தென்னிந்திய சினிமாவின் முக்கிய அடையாளமாக திகழும் நிறுவனம் ஏவிஎம். அதனை நிறுவிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தனது உழைப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற அக்கால நடிகர்களுக்கு அடையாளம் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்த ஏவிஎம் நிறுவனம், மேலும் பல நடிகர்களை வளர்த்தெடுத்திருக்கிறது. ஏவிஎம் ஸ்டுடியோ வாயிலில் சுற்றும் ஏவிஎம் உலக உருண்டை தான் தமிழ் சினிமா என்றாலே முதலில் அடையாளப்படுத்தப்பட்ட விஷயமாக இன்று வரை இருக்கிறது. அத்தகைய நிறுவனத்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு அடுத்து அவரது மகனான ஏவிஎம் சரவணன் தலைமை தாங்கி நடத்தி வந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற அன்றைய சூப்பர் ஸ்டார்களுக்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் எப்படி நெருக்கமானபவராக இருந்தாரோ அதேபோல ரஜினி, கமல் போன்ற அடுத்த கால சூப்பர் ஸ்டார்களுக்கு ஏவிஎம் சரவணன் நெருக்கமானவராக இருந்துள்ளார். முதலில் ஏவிஎம் நிறுவனத்தில் கதைப்பிரிவில் பணியாற்றிய ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு கதை பற்றிய அறிவு அதிகம் என்பது அவரோடு பணியாற்றியவர்கள் சொல்லும் தகவல். அதன் காரணமாகவே இயக்குனர்கள் சொல்லும் கதைகளில் அவர் கூறும் மாற்றங்களை செய்து படங்களை வெளியிடும்போது அவை ஹிட் அடித்தன என நினைவு கூறுகின்றனர் அவர்கள். உதாரணமாக சம்சாரம் அது மின்சாரம், நானும் ஒரு பெண், சிவாஜி, வேட்டைக்காரன், அயன், மின்சார கனவு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இவர் தயாரித்துள்ளார். அவரது ஓய்வுக்கு பின் தற்போது அந்நிறுவனத்தை அவரது மகன் எம்எஸ் குகன் கவனித்து வருகிறார்.
ஏவிஎம் சரவணன் இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாட்டுச் சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
சரவணன் மீது திரைத்துறையினர் அனைவருக்குமே மரியாதை இருக்கிறது. எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பி பாதுகாத்தாலும்; மற்றவர்களிடம் ரொம்பவே எளிமையாக பழகும் குணம்தான் அவரது இந்த வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணமாக கருதப்படுகிறது. சிறு வயது முதலே வெள்ளை நிற ஆடைகள் அணிவதில் ஆர்வமிருந்த சரவணன் அவர்களுக்கு அடையாளமாகிப்போனது அவரது ஒயிட் & ஒயிட் ஆடைகள்.
அனைத்து பணிகளில் இருந்தும் முழுக்க முழுக்க ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் சரவணன். கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு காரணமாக உடல்நலத்தில் சில பிரச்னைகள் வந்ததாக தெரிகிறது. மருத்துவர்களும் முடிந்த அளவு அவருக்கு சிகிச்சை கொடுத்தார்கள். ஆனால் அந்த சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளும் நிலையை கடந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இன்று மாலை 3.30 மணி வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
