நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு, ரகசியம் மற்றும் உறுப்பினர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 13ம் தே வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளாகத்திற்குள் அதிநவீன டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என மக்களவை செயலகம் அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

தற்போது சந்தையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய மற்றும் ரகசியமாகக் கண்காணிக்கப் பயன்படக்கூடிய பின்வரும் சாதனங்களை நாடாளுமன்றத்திற்குள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட் வாட்ச்கள், கேமரா பொருத்தப்பட்ட பேனாக்கள், ஸ்மார்ட் கண்ணாடிகள், இதர ரகசிய ஆடியோ/வீடியோ பதிவு செய்யும் டிஜிட்டல் கருவிகள் ஆகியவற்றை கொண்டு வரக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள முக்கிய சுற்றறிக்கையில், தற்போது நாடு முழுவதும் மிக மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் சாதனங்கள் பரவலாகக் கிடைப்பதாகவும், இவற்றில் சில சாதனங்கள் ரகசியமாகப் பதிவு செய்யவும், உளவு பார்க்கவும் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய கருவிகளை நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதிப்பது, அங்கு நடைபெறும் விவாதங்களின் ரகசியத்தன்மை, எம்.பி.க்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் நாடாளுமன்றத்தின் தனிப்பண்பு சார்ந்த உரிமைகளை மீறுவதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதுகாப்பு நலன் கருதி உறுப்பினர்கள் இந்தச் சாதனங்களைத் தவிர்ப்பது அவசியமாகிறது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் மாண்பைக் குலைக்கும் எந்தவொரு செயலையும், கருவிகளையும் அனுமதிக்க முடியாது எனச் செயலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version