2027-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. இருப்பினும், இத்தொடர் தொடங்க இன்னும் ஓராண்டுக்கும் மேலான காலம் இருந்தபோதிலும், அதன் அட்டவணை எவ்வாறு அமையலாம் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்ததாவது, ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிகள் நடைபெறும் மே மாத இறுதியில் மழை மற்றும் பருவகால மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, 2027-ஆம் ஆண்டு முதல் தொடரை மார்ச் 10-ஆம் தேதியே தொடங்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றத்தின் மூலம் தொடரை மே 15-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மே 15-க்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய மழைப்பொழிவு மற்றும் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால், பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகளின் போது சிக்கல்கள் எழுவதைத் தடுப்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் என்று தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிசிசிஐ-யின் கேம்ஸ் டெவலப்மென்ட் பொது மேலாளருக்குத் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டாலும், தற்போதுள்ள இரண்டு மாத கால இடைவெளிக்குள் அதைச் செய்வது கடினம் என்றும், வெளிநாட்டு வீரர்கள் வருகையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதால் இது தற்போது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
