தமிழ்நாடு அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. திமுகவின் கூட்டணி உறுதியாக இருக்கிறது. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதிலிருந்து விலகிய பாமக, திமுகவுடன் சேரப் போகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது. இந்த அரசியல் வழமைகளில் புதிய கிளையாக முளைத்திருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தற்போது அனைவரது கண்களும் குறிவைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்துக்குள் பேச்சு எடுபட்டிருக்கிறது. 

தனித்து நிற்குமா தவெக

தமிழ்நாடு அரசியல் களத்தில் கூட்டணி நிலைப்பாடு என்பது மிக முக்கியமானதாக ஆகிவிட்டது. நெடுங்காலமாக ஆட்சிக் கட்டில்களில் அமர்ந்திருக்கும் பெருங்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவே இப்போதெல்லாம் கூட்டணி சேர்க்காமல் தேர்தலைச் சந்திப்பதில்லை. நாம் தமிழர் கட்சி மட்டும் இதற்கு முதலிலிருந்தே விதி விலக்காக இருக்கிறது. அதனால்தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தைப் பெறவே அதற்கு இத்தனை தேர்தல்கள் தேவைப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கி, இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் போகும் நடிகர் விஜய், தனித்துப் போட்டியிடப் போகிறாரா? கூட்டணியில் இணையப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அவரிடம் 234 தொகுதிக்கும் நிறுத்தி வைக்கத் தகுந்த வேட்பாளர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கட்சி தொடங்கியதிலிருந்தே கூட்டணி சேர்வதில்லை என்று அவர் முடிவெடுத்து இருப்பதாகவும், அப்படியே சேர்ந்தாலும் அது பாமக, விசிக போன்ற சிறிய கட்சிகளுடன் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

திமுகவுடன் கூட்டணியா? 

ஏற்கெனவே விசிக, திமுகவின் கூட்டணியில் உள்ளது. பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாகப் பேச்சு எழுகிறது. அண்மையில் கூட அதுபற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அன்புமணி பதிலளிக்க மறுத்துவிட்டார். இவ்விரண்டு கட்சிகளுடன் கூட்டணியில் சேரலாம் என்ற விஜய்யின் திட்டம் எந்த அளவுக்குப் பலிக்கும் என்பது தெரியவில்லை. மறுபுறம், திமுகவினர் விஜய்யையும், விஜய் திமுகவையும் மாற்றி மாற்றி விமர்சித்து வருகின்றனர். மேடைகள்தோறும் திமுக ஆட்சியை விஜய் விமர்சித்து வருகிறார். விஜய், அரசியல் தெளிவு இல்லாமல் செயல்படுகிறார் என்று அண்மையில் கனிமொழியும் சாடியிருக்கிறார். அதனால் திமுகவுடன் விஜய் கூட்டணி சேர்வது நிச்சயமாக நடக்காது என்பது தெரிகிறது. தனக்கு முன்னர் கட்சி தொடங்கிய திரைப் பிரபலமான கமல்ஹாசனின் வழியை விஜய் பின்பற்றுவார் என்றும் தோன்றவில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

அதிமுக அழைத்ததா? 

விஜய்யை அதிமுகவுடன் கூட்டணி சேர்க்க சிலர் விரும்பிப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. அதிமுக – தவெக கூட்டணியில் இரண்டாம் அணி அமையும், ஆட்சியைப் பிடித்தால் விஜய்தான் துணை முதலமைச்சர் என்றெல்லாம் பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் அது கைகூடுவதற்கு முன்பே பாஜகவுடனான அதிமுகவின் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டதால் இந்த ஆசை நிராசை ஆகிவிட்டது. திமுகவுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருப்பதால் அதிமுகவுடன் விஜய் இணைவார். இந்தக் கூட்டணி வலுவான இரண்டாவது அணியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் பாஜக – அதிமுகவே இரண்டாவது அணியாக உருப்பெற்றுவிட்டது. இதனால் அரசியலில் நாம் தமிழர் கட்சியைப் போல் விஜய் தனித்து விடப்பட்டார் என்றும் பேச்சு எழுகிறது. 

பாஜகவின் இலக்கு விஜய்? 

இது இப்படி இருக்க, விஜய்யை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்று பாஜகவும் முயல்வதாகத் தெரிகிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் விஜய் பாஜகவுடன் இணையலாம் என்று பாஜகவினர் ஆங்காங்கு வெளிப்படையான அழைப்புகள் விடுத்து வருகின்றனர். ரகசியமாகவும் விஜய்க்கு பேச்சுவார்த்தைக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இதே நிலைப்பாட்டை உறுதி செய்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி என்பது கிடையாது என்று தவெகவின் சிடிஆர் நிர்மல் குமார் கூறியிருக்கும் நிலையில், தமிழிசை சௌந்தரராஜனிடம் அதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லையே” என்று ஒரே போடாகப் போட்டுள்ளார். “திமுகவை எதிர்க்க அனைவரும் ஒரே அணியாக ஒன்று திரள வேண்டும்” என்றும் விஜய்க்கு அழைப்பு விடுக்கும் தொணியில் பேசியிருக்கிறார். 

புதிதாகக் கட்சி தொடங்கி, உடனேயே சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் அளவு கட்டமைப்பை விஜய் உருவாக்கி வைத்திருக்கிறாரா? அவருக்கு இருக்கும் பெரும் ரசிகர் படை, வாக்குகளாக மாறுமா என்றெல்லாம் கேள்விகளால் அவர் சூழப்பட்டிருக்கும் நிலையில், அவரை எப்படியாவது கூட்டணிக்குள் வளைத்துவிட வேண்டும் என்று பெருங்கட்சிகள் குறி வைத்தும் வருகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான அணியில் இணைவாரா? தனித்து நின்று பலமுனைப் போட்டியை உருவாக்குவாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விவேக்பாரதி

Share.
Leave A Reply

Exit mobile version