திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர பாய்லர் வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். ஏழு பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்தபாளையம் அருகே அமைந்துள்ள ஒரு தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. வெடி அதிர்வு மற்றும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போராடினர். தொழிற்சாலை இடிபாடுகளில் சிக்கியவர்கள் யாராவது உள்ளனரா என தேடும் பணி தொடர்கிறது. உயிரிழந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவி ரஞ்சன் என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்களில் நான்கு பேர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், மூன்று பேர் செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் சென்னையில் உயர் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இந்தச் சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “விபத்துச் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

மேலும், “காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகளை வழங்கி, அவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். வேதிப்பொருட்கள் அடிப்படையில் இயங்கும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இத்தகைய எதிர்பாராத விபத்துகளைத் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டிய அவசியம் இந்த விபத்து மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. அதிகாரிகள் விபத்துக்கான காரணங்களை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version