தொடர்ச்சியான முழக்கங்களாலும், அமளிகளாலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் இறுதி நாளான இன்று, எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, இரு அவைகளும் அடுத்த திங்கள்கிழமை (10-ம் தேதி) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் ஒவ்வொரு முறை கூடும்போதும் வெவ்வேறு காரணங்களைக் கூறி அதை முடக்குவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வழக்கமாக மாறிவிட்டது. இந்த முறை மாணவர் அமைப்புகளின் போராட்டம் மற்றும் ராமர் கோயில் நன்கொடை முறைகேடு ஆகியவற்றை முன்வைத்து அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
மாணவர் போராட்டம் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், ராமர் கோயில் நன்கொடை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு விசாரணைக்குழு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும், நாடாளுமன்ற நடைமுறைகளை சீராக நடத்த அனுமதிக்காமல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முடக்கி வைத்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு நேரில் சந்தித்துப் பேசினார்.
ஆனாலும் எதிர்க்கட்சிகள் புதிய காரணங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுத்து வருகின்றன. இதனால் முக்கியமான சட்டமியற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம் சீராக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசு தரப்பில் வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.
