‘வெற்றி 150 நாள்’ திட்டத்தின் மூலம் தமிழக வெற்றிக் கழக அரசு மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டதாகவும் திமுக எம்.எல்.ஏ. ரகுபதி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்றும் குற்றம்சாட்டினார்.
“மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டோம்; தொட்டால் விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று அரசு கூறுகிறது. ஆனால், சனிக்கிழமைகளில் பனையூரில் நடைபெறும் வாரச்சந்தைக்கு வருபவர்கள் அனைவரும் இதற்கு முன் ‘தொட்டவர்கள்’ தான்” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
மேலும், “வெற்றி 150 நாள் திட்டம் மூலம் ஒன்றிய அரசிடம் தவெக அரசு அமைதியாக சரணடைந்துவிட்டது. தேர்தலில் சத்தமில்லாமல் வந்தது போலவே, மத்திய அரசிடமும் சத்தமில்லாமல் சரணடைந்துள்ளது” என்று அவர் விமர்சித்தார்.
நிதியமைச்சர் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் வாசித்ததையும், வேளாண் அமைச்சர் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து லட்டு, புளியோதரையுடன் வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ததையும் சுட்டிக்காட்டிய ரகுபதி, “ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கொள்கை வழியில் வந்தவர்கள் நாங்கள்” என்றார்.
திமுக தலைவர் குறித்து கூறிய அவர், “அவரை காணவில்லை என்று சொல்பவர்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், விடியல் பயணத் திட்டங்களில் அவர் இருக்கிறார் என்று சொல்கிறோம். ‘விடியல்’ என்ற பெயர் பிடிக்காததால் அந்தச் சொல்லைத் திட்டங்களில் இருந்து நீக்கியுள்ளீர்கள். மீண்டும் தமிழகத்தில் விடியலை நாங்கள் கொண்டு வருவோம்” என்றார்.
‘அண்ணன் சீர்’ திட்டம் குறித்து பேசுகையில், “ரூ.832 கோடியில் அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. இரண்டு முதல் மூன்று லட்சம் பெண்கள் பயன்பெறும் திட்டம் இது. ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.1.05 லட்சமாக உள்ளது. புடவை விலை சேர்த்தாலும், குறைந்தபட்சம் ரூ.2,000 கோடி தேவைப்படும்” என்று அவர் கணக்கிட்டு விளக்கினார்.
மேலும், 200 யூனிட் இலவச மின்சாரம், மின் கட்டண உயர்வு, மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் ரகுபதி தெரிவித்தார்.
