அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெகவில் (தமிழக வெற்றி கழகம்) இணைய உறுதியாக இருக்கிறார். அவர், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இணையாமல், முதல்வர் விஜய் முன்னிலையில் பிரம்மாண்டமான விழாவில் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், ஜூன் 29ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இணைப்பு விழா ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் தனது அரசியல் எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார். ஏற்கெனவே அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். ஆனால் அவர்கள் இதுவரை முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இணைந்த சிலருக்கு உரிய மரியாதையும் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனும் புகார்கள் எழுந்துள்ளன.
இதன் விளைவாக, தவெகவில் இணைந்து 10 நாட்களுக்குள் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் இணையும் போது முதல்வர் விஜய் நேரில் இருக்க வேண்டும் என்பதில் கறார் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். இதுதொடர்பாக இரு நாட்களுக்கு முன்பு புஸ்ஸி ஆனந்தை அவர் நேரில் சந்தித்துப் பேசினார்.
விஜயபாஸ்கருடன் ஏராளமான ஆதரவாளர்களும், உள்ளூர் நிர்வாகிகளும் இணையவிருப்பதால், இணைப்பு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முதலில் ஜூன் 29ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் இந்த விழா நடைபெற இருந்தது. ஆனால் அன்றைய தினம் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான முக்கிய மாநாடு இரு நாட்கள் நடைபெற உள்ளதால், அவரால் இணைப்பு விழாவில் பங்கேற்க முடியாது என்பதால் தேதி மாற்றப்பட்டது.
தற்போது ஜூலை 2ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த இணைப்பு விழாவை ஏற்பாடு செய்ய தவெக தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த தேதி மாற்றம் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முக்கிய முகமான விஜயபாஸ்கரின் வருகை தவெகவுக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய் முன்னிலையில் நடைபெறும் இந்த விழா, கட்சியின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை பிரதிபலிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
