தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்தப் பின்னணியில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆளும் கட்சியின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்களில் பங்கேற்கும் போது, “பெரும்பான்மை இல்லாத அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். தமிழகத்துக்கு மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது” எனக் கூறி வருகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்கும் நோக்கில் ஒரு தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் இந்தச் சதியின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கைதான நரேஷ் என்பவர், அசோக்குமாரை சென்னையில் நேரடியாக சந்தித்துப் பேசியதாகவும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் கொடுத்த அறிவுரையின் அடிப்படையிலேயே எம்.எல்.ஏ. இளையராஜாவுடன் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய நபர்களை விசாரிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், எதிர்கால அரசியல் நகர்வுகளை எப்படி பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
