வெக எம்.எல்.ஏ.-விடம் குதிரைப் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய மூன்று பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவல்லிக்கேணி போலீசார் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.

இந்த மனு நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, கைது செய்யப்பட்ட மூவரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, திருவல்லிக்கேணி சரக காவல் உதவி ஆணையர் அழகு சாட்சிக் கூண்டில் நின்று, குற்றச் சதி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் முக்கிய ஆதாரங்களை கண்டறிய காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றம்சாட்டப்பட்டவர்கள், தங்கள் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டதாகவும், வெள்ளைத் தாளில் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் கூறி, போலீஸ் காவலுக்கு அனுப்பக் கூடாது என தெரிவித்தனர்.

மூவரின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அரசியல் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் விசாரணை தேவையில்லை என்றும், ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் அருண் அன்புமணி, வழக்கில் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய ஐபோன்களில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும், சிங்கப்பூரில் இருந்தே உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஒருவர் வீட்டில் ரூ.1 லட்சமும், மற்றொருவர் வீட்டில் ரூ.13 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், குதிரைப் பேரமாக பேசப்பட்டதாகக் கூறப்படும் ரூ.35 கோடி பணத்தின் மூலத்தை கண்டறிய காவல் விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போலீஸ் காவல் கோரிய மனு மீதான உத்தரவை நாளை வழங்குவதாக அறிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version