தமிழகத்தில், அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்குவதை உறுதி செய்ய உரிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி வழக்கில் பதிலளிக்க, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளைத் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு முக்கிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மே 10 அன்று தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை முதலில் இசைக்கப்பட்ட பின்னரே தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. இந்த வரிசை மாற்றம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபுக்கு எதிரான இந்த நடவடிக்கை தமிழ் பண்பாட்டு அடையாளத்தை பாதிக்கும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், “தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளைத் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவு செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இது வெறும் சடங்கு அல்ல; தமிழர்களின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் தனித்துவ அடையாளம் ஆகும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தை முதலில் பாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால், மாநில பாடலை முதலில் இசைக்க எவ்வித தடையும் விதிக்கவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், மத்திய சுற்றறிக்கையைப் பயன்படுத்தி அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்தின் முன்னுரிமை நீர்த்துப் போகும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

மனுவில் மேலும், “வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தும் மத்திய அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலாச்சார மோதல் ஏற்படாமல் தடுக்க, தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் இசைக்க உரிய நிர்வாக அறிவுறுத்தல்களை மாநில அரசுக்கு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதால், சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மொழி, கலாச்சாரப் பாதுகாப்பு விவகாரங்கள் அடிக்கடி விவாதத்திற்கு உள்ளாகும் நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version