தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த உயர்மட்டச் சந்திப்பின் போது, தமிழகத்தின் முக்கியத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட மாநில உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் குறித்துப் பிரதமரிடம் அவர் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி பயணத்தின் முக்கிய நிகழ்வாக, அங்குள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கவுள்ளார்.

முதலமைச்சரின் இந்த முதல் டெல்லி வருகையை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளைத் தமிழக உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து, உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version