2025-2026-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 9 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 8,21,105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.15% மாணவர்களும், 96.47% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.
இதுதவிர பள்ளியில் மாணவர்கள் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
