சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று காலையில் ஏற்பட்ட விபத்தில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ஆம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்காடு மலைக்கிராமங்களில் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளதால், மாணவர்கள் பெரும்பாலும் தனியார் வேன்களையே பள்ளிக்குச் செல்லப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், வாழவந்தி பகுதியைச் சேர்ந்த மேகனா என்ற சிறுமி, இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளி வளாகத்தை வேன் சென்றடைந்ததும், ஓட்டுநர் குழந்தைகளை இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, வேனை கவனக்குறைவாகப் பின்னோக்கி எடுத்தபோது, பின்னால் நின்றிருந்த மாணவி மேகனா எதிர்பாராதவிதமாக வேன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். தலையில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற ஏற்காடு காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கவனக்குறைவாக வேனை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ரங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைக்கிராமங்களில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களின் பயணப் பாதுகாப்பிற்குத் தனியார் வேன்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பள்ளி வாகனங்களை ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான கூடுதல் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
