உயிர்காகும் உன்னதப் பணியில் தங்களை ஈடுபடுத்தும் மருத்துவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சியினர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் வாழ்த்தில் கூறியுள்ளதாவது…
மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.
மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரன்;-
பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரைக் காக்கும் உன்னத பணியை தங்களின் கடமையாக மட்டுமல்லாது, மனிதநேய சேவையாகவும் கருதி பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணை, மனிதநேயம் மற்றும் சேவை மனப்பான்மையை அடிப்படையாக கொண்டு பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும் பணியில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவரின் தன்னலமற்ற சேவையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்
பாஜக மூத்தத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்;-
“Behind the Mask: Who Heals the Healers” மருத்துவர்கள் நோயாளிகளை தங்கள் குடும்ப உறுப்பினர்களை போல் பார்த்துக் கொள்ள வேண்டும், நோயாளிகளும் மருத்துவர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல் அன்பு செலுத்த வேண்டும். தன்னலமற்ற சேவை செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மனமார்ந்த மருத்துவ தின வாழ்த்துகள்… மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்கள் மருத்துவர் களை இறைநிலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்..
கரோனா போன்ற பேரிடர் காலங்களில் பல மருத்துவர்கள் தன்னலமற்ற சேவையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.. அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் நாளாக இந்த மருத்துவர் தினம் இருக்கட்டும்.
உயிர் காக்கும் மருத்துவர்கள் அனைவரும் தாங்களும் மகிழ்ந்து தம்மிடம் வருபவர்களையும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்!..
