தமிழக முதலமைச்சர் விஜய், மாநில அரசின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வரும் நிலையில், இன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். இந்த மாதத் தொடக்கத்தில் பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், வியாசர்பாடி மின்சாரப் பேருந்து சார்ஜிங் வசதிகள், நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் ஆலை மற்றும் கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை ஏற்கனவே ஆய்வு செய்திருந்தார். இப்போது மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால விரிவாக்கங்களை நேரடியாகப் பார்வையிட உள்ளார்.

இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் அலுவல் பணிகளை முடித்த பிறகு, பிற்பகல் 2 மணியளவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சர், அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து நந்தனம் அலுவலகத்திற்குச் செல்லவுள்ளார். பயணத்தின் போது வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் நோக்கிச் செல்லும் பயணிகளிடம் அவர்களின் குறைகள், தேவைகள் மற்றும் சேவை மேம்பாடு குறித்து நேரடியாகக் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நந்தனம் அலுவலகத்தில் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தின் (OCC) செயல்பாடுகள், நெட்வொர்க் மேலாண்மை மற்றும் இயக்கக் கட்டுப்பாடு குறித்து அதிகாரிகளிடம் விரிவாக விசாரிப்பார். அதனைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழும (CUMTA) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மெட்ரோ சேவைகளின் திறன் மற்றும் சென்னையின் பொதுப் போக்குவரத்தை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயவுள்ளார்.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் மொத்தம் 118 கிலோமீட்டர் நீளத்தில் மூன்று வழித்தடங்களில் – மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் – நடைபெற்று வருகிறது. இதில் ஓட்டுநர் இல்லாத (driverless) ரயில்களை இயக்குவதற்கான தொழில்நுட்பப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக பூந்தமல்லி முதல் போரூர் வழியாக வடபழனி வரையிலான சுமார் 16 கிலோமீட்டர் பகுதி பணிகள் நிறைவடைந்துள்ளன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்த நிலையில், இந்தப் பகுதி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வுக்குப் பிறகு முதலமைச்சர் கிண்டி வழியாக போரூர் மற்றும் பூந்தமல்லி வரை சென்று இரண்டாம் கட்டப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிடுவார். இதன் மூலம் சென்னை மெட்ரோவின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்த முழுமையான படத்தைப் பெற முடியும் என அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version