தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவுசெய்யப்பட்ட டாஸ்மாக் சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்பில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த முறைசாரா பணவசூல் நடைமுறைகளால் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவிலான வருவாய் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் திசைதிருப்பப்பட்டு வந்ததாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் காரணமாக மாநில அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.3,600 கோடியைத் தொட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்யிடம் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, டாஸ்மாக் வருவாயில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் புதிய அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு ரூபாய் வருவாயும் அரசின் கருவூலத்திற்குச் சென்றடைய வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அத்துடன், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் தற்போதைய முறையை மறுஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் இயங்கி வந்த 717 மதுபான விற்பனை நிலையங்களை அரசு ஏற்கனவே மூடியுள்ளது. மேலும், டாஸ்மாக் மொத்த மற்றும் சில்லறை நிலையங்களில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த அதிகாரப்பூர்வமற்ற பணவசூல் அமைப்புகளை முற்றிலுமாகக் கலைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு, கோவை பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன் பாளையம், நவகரை ஆகிய இடங்களிலுள்ள கிடங்குகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள சிவாஸ் மதுபான தயாரிப்பு ஆலை மற்றும் மன்னார்குடியில் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசின் இந்த நடவடிக்கைகள் டாஸ்மாக் அமைப்பில் நீடித்து வந்த முறைகேடுகளை ஒழித்து, அரசு வருவாயைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version