சென்னை: அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பெரிய மருத்துவ நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வருகை தரும் நிலையில், பதிவு மற்றும் முன்பதிவுக்கான நீண்ட வரிசைகள் நோயாளிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தன. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய டிஜிட்டல் முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘நலம் ஏஐ’ என்ற உரையாடல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே எளிய உரையாடல் வாயிலாக மருத்துவ முன்பதிவு செய்துகொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான ‘நலம் டிஎன்’ இணையதளத்தை முதலமைச்சர் விஜய் சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளுக்கு உதவும் வகையில் சிறிய தொகையை செலுத்தி பயன்படுத்தும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவின்போது மேடைக்கு வந்த முதலமைச்சர் விஜய், இரு கைகளாலும் இதய வடிவில் கைகாட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரை வரவேற்கும் வகையில் அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பினர். விழாவில் முதலமைச்சர் ‘நலம் ஏஐ’ செயலியை தொடங்கி வைத்த பின்னர், பல்வேறு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 139 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்களையும் அவர் திறந்து வைத்தார். மேலும், 751 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளும், சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட 1,393 பேருக்கும் ஆணைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான ஒரு பெண் மருத்துவருக்கு முதலமைச்சர் விஜய் மேடையில் இருந்து இறங்கி சென்று நேரில் பணி நியமன ஆணையை வழங்கினார். அந்தப் பெண் மருத்துவர் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி நன்றி தெரிவித்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த டிஜிட்டல் முயற்சியும் பணி நியமனங்களும் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
