விவசாய கடன் தள்ளுபடியை முடிந்த அளவு செய்தேன் என திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசினார்.
தமிழகத்தின் 17-வது சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) பெரும்பான்மை பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருச்சி வந்தார்.
இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி வந்த முதலமைச்சரை, விமான நிலையத்தில் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர். குறிப்பாக, திருச்சி மக்களவை உறுப்பினரும் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விமான நிலையத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர், முதலமைச்சர் ஜோசப் விஜய் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை வேனில் பயணம் செய்தார். வழிநெடுகிலும் த.வெ.க. தொண்டர்களும், பொதுமக்களும் பூக்களைத் தூவி, கொடிகளை ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு மக்கள் மத்தியில் முதலமைச்சர் மீதான அபிமானத்தை பிரதிபலித்தது.
மாலையில் திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்தில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் பொது நிகழ்வு இதுவாகும். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு எனது சிறப்பு நன்றி,” என்று தொடங்கிய அவர், “என்னை இப்போது பெரம்பூர் தொகுதி மக்கள் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் திருச்சி கிழக்கு எனக்கு கண்ணிமை போன்றது” என்றார். மேலும், “ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்கள், 6 நாள் கூட அமைதியாக இல்லை. மக்கள் இதுவரை ஏமாற்றியவர்களை மாற்றி, இந்த விஜயை முதல் சேவகனாக்கியுள்ளனர்,” என்று கூறினார். எம்.ஜி.ஆர். கூட முதல் தேர்தலில் இவ்வளவு ஓட்டுகள் பெறவில்லை என்பதை நினைவுகூர்ந்த அவர், “1977-ல் போடாத ஓட்டை 2026-ல் போட்டிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாக தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
எதிர்க்கட்சியினரைச் சுட்டிக்காட்டிய அவர், நான் கோட்-சூட் போடுவதையும் சொல்கிறார்கள். மற்றவர்களை மாதிரி கலர் கலாராக இல்லை. இரண்டே கலர் கருப்பு, வெள்ளை என்றார். தொடர்ந்து தி.மு.க.வை குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர், “கடைசி 5 நாட்களில் ஆட்சியமைக்க ஒரு கூத்து நடத்தினார்கள். ஆனால் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். எதிர்க்க எதிர்க்க நமக்கு நன்மையே,” என்றார். மேலும், “மக்களை தற்குறி என்று அழைப்பவர்களின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. அண்ணா உருவாக்கிய கட்சியை அடிமைப்படுத்தியது யார் என்பதை அவர்களே சிந்திக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
“200 யூனிட் இலவச மின்சாரம், டாஸ்மாக் கடைகள் மூடல், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். விவசாய கடன் தள்ளுபடியை முடிந்த அளவு செய்தேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘சிங்கப்பெண்’ திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்படும். ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத அரசை உருவாக்குவேன்,” என்று உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்த வருகை மூலம் முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது தொகுதி மக்களுடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளார். இடைத்தேர்தலில் திருச்சி கிழக்குக்கு வலுவான வேட்பாளரை நிறுத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளது.

