டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவை வழங்கினார்.

2 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (மே 27) டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் விஜய்க்கு காவலர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.

இதையடுத்து பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் விஜய், மேகதாது விவகாரம், இலங்கை மீனவர்கள் பிரச்சனை, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.

இந்தநிலையில், பிரதமர் உடனான சந்திப்பிற்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு விரைவான வளர்ச்சியைப் பெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இந்த வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்:

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள் மற்றும் தொழில் வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்.

 

தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேம்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் கோவை, மதுரை மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சரிடம் முதலமைச்சர் விஜய் முன்வைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version