தேசிய அளவில் கல்வித் துறை முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் பிரபல சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு திமுக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, டெல்லிக்கு சென்று சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு திமுகவின் ஆதரவை தெரிவித்தார். சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து நலிவடைந்து வருவதால், அவரிடம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தாக குறிப்பிட்டார். ஆனால், அதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக ராசா கூறினார். தான் இறப்பதே இந்த மத்திய அரசின் கண்களைத் திறக்கும் என்றாலோ அல்லது இந்த மண்ணில் ஒரு விழிப்புணர்வை எழுச்சியை ஏற்படுத்தும் என்றாலோ அதற்காக தனது உயிரைத் தரவும் நான் தயாராக இருப்பதாக சோனம் வாங்சுக் கூறியதாக அவர் தெரிவித்தார்.

லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக், கல்வித் துறை மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும் கடந்த 19 நாட்களுக்கும் மேலாக இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் முன்னெடுத்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயிரும் மதிப்புமிக்கது என்று கூறியுள்ளது. அதைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version