கோவை சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடந்தது என்ன, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து மேற்கு மண்டல காவல் துறை இணை இயக்குநர் (ஐஜி) ரம்யா பாரதி விரிவாக விளக்கி உள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து வழக்கின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய அவர், சம்பவம் நடைபெற்ற அன்று மாலை 6 மணியளவில் சிறுமி வீட்டில் காணவில்லை என அவரது பெற்றோர் 100 என்ற அவசர உதவி எண்ணிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர்.
இரவு 10 மணிக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணியாற்றின. சிசிடிவி காட்சிகளைத் துல்லியமாக ஆய்வு செய்ததில், பக்கத்து வீட்டில் வசித்த கார்த்தி என்பவன் சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவாளி கார்த்தி போலீசார் வருவதை அறிந்து பதுங்கி இருந்தபோது, அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது தப்பிக்க முயன்றான். இதில் அவனுக்கு வலது கை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், குற்றம் நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் கார்த்தி மற்றும் அவருடன் தொடர்புடைய மோகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு எந்தவித சமரசமும் இல்லை. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றப் பத்திரிகையை விரைவாக தயாரித்து, உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை முழுமையான விவரங்கள் வெளியிடப்படாது என்றும், ஆனால் வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் துல்லியமாக சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
