கோயம்புத்தூர் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், உயிரிழந்த சிறுமியின் உடற்கூராய்வு (Autopsy) நிறைவடைந்து, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கோவைக்கு நேரில் விரைந்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களையும், உறவினர்களையும் நேரில் சந்தித்து முதலமைச்சரின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், குற்றவாளிகளுக்கு எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகத் தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது, “இந்த வழக்கில் எவ்வித சமரசமும் இன்றி, குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் முன் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முடுக்கிவிட்டுள்ளது” என  அமைச்சர் சம்பத்குமார் உறுதியளித்தார்.

உடற்கூராய்வு நிறைவு

முன்னதாக, கண்ணம்பாளையம் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் உடல், கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ (ESI) அரசு மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை காலை, மருத்துவக் குழுவினரால் சிறுமியின் உடலுக்கு விரிவான உடற்கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின் அறிக்கைக்குப் பின்னரே, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் மரணத்திற்கான துல்லியமான காரணங்கள் குறித்த மருத்துவ அறிக்கை காவல்துறைக்கு முறைப்படி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உடற்கூராய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதிய வேளையில் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகளின் உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க, இஎஸ்ஐ மருத்துவமனை வளாகம் மற்றும் சிறுமியின் கிராமத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீவிரமடையும் போலீஸ் விசாரணை

இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரிடமும் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களில் முதன்மை குற்றவாளியான கார்த்திக், போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கட்டிடத்திலிருந்து குதித்ததில் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version