பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் அமைந்துள்ள அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவிலில் முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுவதால், ஒவ்வொரு ஆடி வெள்ளியன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம்.
முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பலர் நேர்த்திக்கடனாக கூழ் ஊற்றி வழிபாடு செய்ததுடன், குடும்பத்தினருடன் அம்மனை தரிசித்தனர்.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் ரூ.200 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இரண்டு பிரிவுகளில் தரிசன ஏற்பாடுகளை செய்திருந்தது. எனினும், பொது தரிசன வரிசையில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பல மணி நேரமாக காத்திருந்த நிலையில், கட்டண சிறப்பு தரிசன பக்தர்களை மட்டும் தொடர்ந்து விரைவாக அனுமதிப்பதாகக் கூறி பொதுத் தரிசன பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து சில பக்தர்கள் கோவில் நிர்வாகத்தினரிடம் நேரடியாக விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீண்ட நேரமாக காத்திருந்த பக்தர் ஒருவர், “எங்களை ஏன் இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீர்கள்? சிலரை நேரடியாக மூலஸ்தானத்திற்கு அழைத்துச் செல்கிறீர்கள்” என அர்ச்சகரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அர்ச்சகர், “நாங்கள் யாரையும் அழைத்து வரவில்லை. கோவில் அலுவலர்தான் அழைத்து வந்தார். அவர் நீதிபதி (Judge). அதுகுறித்து அலுவலரிடம் கேளுங்கள்” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர், “நீதிபதிக்கு என்ன தனி சலுகை? அவருக்கு மட்டும் முன்னுரிமை ஏன்?” என்று கேள்வி எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதேபோல், மற்றொரு பகுதியில் காத்திருந்த பக்தர் ஒருவர், “எங்களிடமும் பணம் இல்லையா? ஏன் சிலருக்கு மட்டும் முன்னுரிமை? அனைவரிடமும் ஒரே மாதிரி கட்டணம் வசூலித்து சமமாக தரிசனத்திற்கு அனுப்புங்கள்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் கோவில் வளாகத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் மற்றும் கோவில் பாதுகாப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பக்தர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் நிலைமை சீரடைந்தது.
முதல் ஆடி வெள்ளியன்று அதிகளவில் பக்தர்கள் வருகை தந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலே இந்த பரபரப்பிற்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்திற்கு இடையிலான முன்னுரிமை நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், அனைத்து பக்தர்களுக்கும் சமமான தரிசன வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
