முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, தன்னை சிறையிலடைத்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமின் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கைதுக்கான சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகாரின் உண்மைத்தன்மை குறித்து ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். அரசியல் பேச்சுக்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சட்டமன்றத்தைப் பூட்டினால் எலும்பை உடைத்துவிட்டுத்தான் அனுப்புவேன் என்றும், முதல்வரை ஒருமையிலும் பேசியுள்ளதாக குறிப்பிட்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளதாகவும், கைது செய்யாவிட்டால் மீண்டும் இதே குற்றத்தை அவர் மீண்டும் செய்யக் கூடும் என்றார். கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் அவருக்கு வழங்கப்பட்டு, அதில் அவர் கையெழுத்தும் போட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாஜிஸ்திரேட் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து திருப்தியடைந்த பிறகே சிறையில் அடைக்க உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், யூகதத்தின் அடிப்படையில், நீதிமன்றத்துக்கு சுமை ஏற்படுத்துவதாக கூறி, மார்க்கண்டேயனின் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
