கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றி உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் உணரப்படுகிறது.
இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவது மக்களிடையே மீண்டும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 2,710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கும், மகாராஷ்டிராவில் 424 பேருக்கும், டெல்லியில் 294 பேருக்கும், குஜராத்தில் 223 பேருக்கும், தமிழ்நாட்டில் 148 பேருக்கும், கர்நாடகாவில் 148 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 116 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 26 அன்று 1,010 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அடுத்த நான்கு நாட்களில் இருமடங்குக்கும் மேலாக அதிகரித்து 2,710 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.