நீதிமன்றங்களில் சாட்சியம் அளிக்க ஆஜராகும் போது முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் எனவும் இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினருக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்கில் சாட்சியம் அளிக்க, கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருக்கோயிலூர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவர், மதுபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து துறைரீதியாக விசாரணைக்கு பிறகு அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்த மேல் முறையீட்டில், கட்டாய ஓய்வு உத்தரவை, மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து, தண்டனைய குறைத்து உத்தரவிட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து நான்கு ஆண்டுகளுக்கு பின் 2020 ஆம் ஆண்டு ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளாமல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டி.ஜி.பி. – விழுப்புரம் டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி, தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறுமுகம் மதுபோதையில் இருந்துள்ளார் என்பதற்கு பரிசோதித்த மருத்துவ அதிகாரி அளித்த சான்றே போதுமானது. காவல் உதவி ஆய்வாளர் மதுபோதையில் நீதிமன்றத்துக்கு சாட்சியளிக்க வந்த செய்கையை சகித்துக் கொள்ள முடியாது எனக் கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

நீதிமன்றங்களுக்கு சாட்சியளிக்க வரும் காவல் துறையினர் முறையான சீருடை அணிந்து வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், காவல் துறையினர் நீதிமன்றங்களுக்கு சாட்சியளிக்க செல்லும் போது முறையான சீருடை அணிந்து, பணி அர்ப்பணிப்புடன் செல்ல வேண்டும்; இல்லாவிட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து போலீசாருக்கும் அறிவுறுத்தி, நான்கு வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version