ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடான சீனா, திடீர் வானிலை மாற்றத்தால் பெரும் சீற்றத்தை எதிர்கொண்டுள்ளது. கனமழை, பயங்கர நிலச்சரிவு மற்றும் சூறாவளி ஆகியவை நாட்டின் பல பகுதிகளை நிலைகுலைய வைத்துள்ளன. இந்த இயற்கைப் பேரிடர்களில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கன்சு மாகாணத்தின் லோங்னான் கிராமத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் மண் சரிவு ஏற்பட்டதால் 33 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். உடனடியாகச் செயல்பட்ட மீட்புப் படையினர் இடிபாடுகளிலிருந்து 21 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 12 பேரை மீட்க மீட்புக் குழுக்கள் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இப்பகுதியில் மழை தொடர்வதால் மீட்புப் பணிகள் சிரமமான நிலையில் உள்ளன. ஹூபெய் மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி, இடி மின்னல் மற்றும் பலத்த காற்று 11 பேரின் உயிரைப் பறித்தது. ஒருவர் இன்னும் காணாமல் போயுள்ளார். இந்தப் புயலால் 4,800க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ‘மேசக்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றொரு பகுதியில் பெருவெள்ளத்தை உருவாக்கியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்தமாக சுமார் 54,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரிடரைச் சமாளிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளார். “மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுங்கள்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் மீட்புப் படைகள், இராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் உச்சக்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, வெள்ளம் சூழ்ந்த ஒரு பண்ணையிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினர் பாம்புகளைப் பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் பல மாகாணங்களில் வானிலை எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது. இயற்கைப் பேரிடர்களுக்கு எதிரான நீண்டகாலத் திட்டங்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version