வாகன மானியங்களுக்காக ரூ.7,000 கோடியும், சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.8,000 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டை வேரோடு ஒழிக்கும் நோக்கில், மாநில அரசு புதிய மின்சார வாகன (EV) கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முக்கிய முடிவை முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தக் கொள்கை, 2030 மார்ச் வரை நடைமுறையில் இருக்கும். இதன்படி, ரூ.30 லட்சம் வரையிலான மின்சார கார்களுக்கு வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

மானியங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், மின்சார இருசக்கர வாகனங்கள் (EV 2W) வாங்குபவர்களுக்கு முதல் ஆண்டு ரூ.30,000, இரண்டாவது ஆண்டு ரூ.20,000 மற்றும் மூன்றாவது ஆண்டு ரூ.10,000 என மூன்று ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும். மின்சார முச்சக்கர வாகனங்கள் (EV 3W) வாங்குபவர்களுக்கு ரூ.50,000, ரூ.40,000 மற்றும் ரூ.30,000 என மானியம் கிடைக்கும். மின்சார லாரிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கொள்முதல் ஊக்கத்தொகை அளிக்கப்படும். 100 சதவீதம் தூய மின்சார வாகனங்கள் (Zero Emission) மட்டுமே இந்தச் சலுகைகளுக்கு தகுதியானவை. ஹைப்ரிட் வாகனங்களுக்கு எந்த மானியமும் இல்லை.

டெல்லியை முழுமையான மின்சார வாகன நகரமாக மாற்றும் இலக்குடன், 2027 ஜனவரி 1 முதல் புதிய ஆட்டோ ரிக்ஷாக்கள் முழுக்க மின்சாரமாக மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும். 2028 ஏப்ரல் 1 முதல் புதிய பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இருசக்கர வாகனங்களின் பதிவு படிப்படியாக நிறுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தக் கொள்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. இதில் ரூ.7,000 கோடி வாகன மானியங்களுக்கும், ரூ.8,000 கோடி சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஒதுக்கப்படும். டெல்லி முழுவதும் 32,000 புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானிய விண்ணப்பங்கள் எளிதாகச் செய்ய பிரத்யேக ஆன்லைன் போர்ட்டல் விரைவில் தொடங்கப்படும். டெல்லி துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்தக் கொள்கை முழு வீச்சில் செயல்படுத்தப்படும். இந்த முயற்சி டெல்லியின் காற்றுத் தரத்தை மேம்படுத்தி, பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version