புதுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் இன்னும் பரபரப்பாகவே உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திமுக மற்றும் அதிமுகவை தோற்கடித்து ஆட்சியமைத்துள்ள நிலையில், திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைந்து விழுந்துள்ளது. தவெக மீது குதிரை பேரம் நடத்துவதாக திமுக குற்றம் சாட்டி வரும் வேளையில், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கடும் ஆவேசத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, தங்கள் கட்சியின் இரு எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய தலைமை உத்தரவிட்டும், அதைத் தடுத்தது யார் எனக் கேள்வி எழுப்பினார். “கட்சி பணிகளுக்காக தொடர்ச்சியாக பயணித்து வருகிறேன். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தபோது குதிரை பேரம் என்று குற்றம் சாட்டியவர்கள், இப்போது எங்கள் எம்எல்ஏக்களைத் தடுத்து நிறுத்துவது என்ன பேரம்?” என்று வினவினார்.
மதிமுக சார்பில் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டதால், டெக்னிக்கலாக திமுக எம்எல்ஏக்களாகவே கருதப்படுகின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுக்குழு கூட்டத்தில் இரு எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஒருமித்த முடிவு என்று துரை வைகோ விளக்கினார்.
“சோபா மாடல், கன்டெய்னர் மாடல் மூலம் குதிரை பேரம், கழுதை பேரம், ஒட்டக பேரம் என பல வகையான பேரங்களை நடத்துபவர்களிடம் எங்கள் எம்எல்ஏக்களை இழந்துவிட்டோம்” என்று குறிப்பிட்ட அவர், திமுக தேர்தலில் சுமார் 6,000 கோடி ரூபாய் செலவு செய்தும் 35 சதவீத வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியதாகச் சுட்டிக்காட்டினார். ஒரு காசு செலவில்லாமல் மக்களின் விருப்பத்தால் தவெக ஆட்சி அமைத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்ற மக்கள் தீர்ப்புக்கு எதிராக திமுக-அதிமுக இப்போது கூட்டணி அமைக்க முயல்வது எந்த வகை பேரம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தவெகவுக்கு பணம் கொடுத்து எம்எல்ஏக்களை வாங்க வேண்டிய அவசியமே இல்லை என்று வலியுறுத்திய துரை வைகோ, மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தங்கள் கட்சித் தலைமையின் முடிவை மீறி எம்எல்ஏக்கள் செயல்படுவது யாருடைய தூண்டுதல் என்ற பெரும் கேள்வியையும் அவர் எழுப்பினார். இந்தப் பேட்டி தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி உடைவுகள், ராஜினாமா அரசியல், குதிரை பேரம் குற்றச்சாட்டுகள் ஆகியவை தொடர்ந்து அரசியல் களத்தை சூடேற்றி வருகின்றன.
