கொரோனாவின் போது மனநலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் இருந்து தவறி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு வந்து சுற்றித்திரிந்த டெல்லியை சேர்ந்த முகமது ஆரிப் என்ற இளைஞரை ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்திருக்கிறது  டேனியல் நல்ல சமாரியன் மனநல காப்பகம் என்னும் தொண்டு நிறுவனம்.

புது டெல்லி ஆர்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கார் டிரைவர் மற்றும் மெக்கானிக்கான இவர் கொரோனா காலத்தின்போது மனநலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் இருந்து ரயில் மூலம் வழிதவறி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதிக்கு வந்து அங்கே சுற்றி திரிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் முகாம் மூலம் மீட்கப்பட்ட முகமது ஆரிப் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் அமைந்துள்ள நல்ல சமாரியன் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கு அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிகிச்சைக்கு பின் தற்போது நல்ல நிலையில் உள்ள முகமது ஆரிப் தனது முகவரி மற்றும் தாய் தந்தை பெயரை கூறியுள்ளார்.

இதை அடுத்து தொண்டு நிறுவன ஊழியர்கள் டெல்லியில் உள்ள முகமது ஆரிப்பின் தாய் மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு, தங்களது மனநல காப்பகத்திற்கு வரவழைத்து முகமது ஆரிப்பை சேர்த்து வைத்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு தனது குடும்பத்தை சந்தித்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக முகமது ஆரிப் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முகமது ஆரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் தொண்டு நிறுவன ஊழியர்களுடன்  மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பின்னர் சொந்த ஊர் திரும்பினர்.

மனநலம் பாதிக்கப்பட்டு மனநிலை சிகிச்சைக்குப் பின் டெல்லியைச் சேர்ந்த கார் டிரைவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version