சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சித் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக – தவெக இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், திமுகவையும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்ததால் திமுகவினர் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று பேசினார். “தவெக மாய பிம்பத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளது. சினிமாவில் ஒருவன் 100 பேரை அடித்துத் தூக்குவது போன்ற காட்சிகளை நம்பி மக்கள் ஏமாந்துள்ளனர். சின்னக் குழந்தைகளை முன்னிறுத்தி மாற்றம் என்ற பெயரில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளனர்” என்று கீதா ஜீவன் குறிப்பிட்டார்.

தவெகவின் இந்த மாயையை உடைக்க திமுக சிப்பாய்கள் ஒவ்வொருவரும் தீவிரமாகப் போராட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முன்பு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததை சுட்டிக்காட்டிய அவர், “நம் தலைவர் ஸ்டாலின், தொங்கு சட்டமன்றம், கவர்னர் ஆட்சி, மீண்டும் தேர்தல் போன்ற சூழல்களைத் தவிர்க்கும் வகையில் ஆதரவு அளிக்கச் சொன்னார். அந்தக் கட்டைக் காலில் தான் தவெக நிற்கிறது. சுயமாக நிற்கும் நிலையில் இல்லை. ஆனாலும் விஜய் தொடர்ந்து கடுமையான வார்த்தைகளால் தாக்குதல் நடத்தி வருகிறார்” என்றார்.

“தீய சக்தி, தீஞ்சு போன சக்தி என திமுகவை விமர்சிக்கும் விஜய், ஊழல்வாதிகள் தவெகவில் சேர்ந்ததும் தூய சக்தியாக மாறிவிடுவார்களா? தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. முதலமைச்சர் பதவிக்கான தகுதியோ, அனுபவமோ இல்லாத விஜய் இன்னும் நடிகராகவே இருக்கிறார். சினிமா வசனங்கள் போன்ற ஏற்ற இறக்கத்துடன் பேசும் அவரது பேச்சில் மனித மாண்பு இல்லை” என்று கீதா ஜீவன் சாடினார்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, கல்வித் தரம் ஆகியவை பின்னோக்கிச் செல்வதாகவும், தவெக அரசின் குற்றங்களை சுட்டிக்காட்டி மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் அவர் உரையை நிறைவு செய்தார். இந்தக் கூட்டத்தில் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது. தவெக ஆட்சிக்கு எதிராக திமுக தீவிரமாகக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version